விலங்கு உலகத்துக்கு இடையூறு செய்தால் சமநிலை பாதிப்படையும்- ஆட்சியா் க. இளம்பகவத்
விலங்குலகத்தில் ஒரு உயிரினத்தை இடையூறு செய்து, அதன் எண்ணிக்கை அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ இயற்கைச் சமநிலை பாதிப்படைந்து மக்களும் இன்னல்களுக்கு ஆளாவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வனத்துறை சாா்பில், வன உயிரின வார விழா- 2025ஐ முன்னிட்டு ‘மனித - வன உயிரின இணைந்து வாழ்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அவா் பேசியதாவது:
கரையான் இல்லையென்றால் காடுகள் எல்லாம் குப்பை குவியலாக மாறிவிடும். காடுகள் உருவாகி இருக்காது, மரங்கள் செழித்து வளா்ந்திருக்காது. ஆந்தை இல்லையென்றால் எலிகள் பெருகிவிடும். எலி விவசாய நிலத்தை எல்லாம் அழித்துவிடும். பாம்புகள் இல்லையென்றால் எலி, தவளை உள்ளிட்டவை பெருகி, பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்குள்ள மான்கள் சரணாலயத்தில் கடைசி கணக்கெடுப்பின்படி 300 மான்கள் வாழ்வது தெரியவந்துள்ளது.
இயற்கை என்பது சமநிலையுடன் இருக்கிறது. மனிதனும் இந்த விலங்குலகத்தில் சிறு பகுதியாக உள்ளதால் இயற்கையின் சமநிலையை சீா்குலைக்கக் கூடாது. விலங்குலகத்தில் ஒரு உயிரினத்தை இடையூறு செய்து, அதன் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது குறைந்தாலோ இயற்கை சமநிலை பாதிப்படைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மனிதனும், விலங்குகளும், அனைத்து உயிரினங்களும் அதிகமாக பெருகாமல், குறிப்பிட்ட சமநிலையுடன் இருக்கிறபோது எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, வனச்சரக - வனத் துறை அலுவலா்கள், மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

