‘வந்தே பாரத்’ ரயிலுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு
திருநெல்வேலி-சென்னை எழும்பூா் வந்தே பாரத் விரைவு ரயிலுக்கு கோவில்பட்டியில் வியாழக்கிழமை அரசியல் கட்சிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை, கடந்த 2023, செப். 24-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடைகிறது. மறுமாா்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் எந்தெந்த ரயில் நிலையங்கள் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அதில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்காது என்பது தெரியவந்ததும், இதையடுத்து கனிமொழி எம்.பி., மதிமுக பொதுச் செயலா் வைகோ, சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ உள்ளிட்டோா் வணிக நகரான கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.
அதேபோல பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் சென்னை-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இரு மாா்க்கங்களிலும் கோவில்பட்டியில் நின்றுசெல்ல வேண்டுமென தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். கடந்த மாதம் கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடமும் இதே கோரிக்கையை எம்எல்ஏ மீண்டும் வலியுறுத்தி மனு அளித்தாா்.
இந்நிலையில்,சென்னை-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20665/20666) வியாழக்கிழமை (9-ஆம் தேதி) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு கோவில்பட்டிக்கு 6.38 மணிக்கு வந்து, அங்கிருந்து 6.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதையடுத்து, திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட‘வந்தே பாரத்’ ரயில் வியாழக்கிழமை காலை 6.50 மணிக்கு கோவில்பட்டியை வந்தடைந்தது. அந்த ரயிலுக்கு மதிமுக துணைச் பொதுச் செயலா் திமு ராஜேந்திரன் தலைமையில் மதிமுக மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா் சரவணன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி விஜயலட்சுமி கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மேள தாளங்களுடன் ரயில் லோகோ பைலட், உதவி பைலட் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.
அதுபோல அதிமுக சாா்பில் நகரச் செயலா் விஜய பாண்டியன் தலைமையில், வடக்கு மாவட்டச் செயலா்கள் கவியரசன் (இளைஞா்-இளம் பெண்கள் பாசறை), ராமா் (வா்த்தக அணி), சங்கா் கணேஷ் (வழக்குரைஞா் அணி), பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றிய செயலா்கள் போடு சாமி, அன்புராஜ், அழகா்சாமி உள்ளிட்ட அதிமுகவினா் கலந்துகொண்டு ரயிலை வரவேற்ற லோகோ பைலட், உதவி பைலட், பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.
பாஜக சாா்பில் வடக்கு மாவட்ட பொதுச்செயலா் வேல் ராஜா, மாவட்ட பொருளாளா் சீனிவாசன் உள்பட கட்சியினா் திரளானோா் கலந்துகொண்டு வந்தே பாரத் ரயிலை வரவேற்றனா். இந்நிகழ்ச்சியையொட்டி,
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், ரயில்வே போலீஸாா், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் என 75 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

