தூத்துக்குடியில் காவல் நிலையம் முன் தீக்குளித்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் முன் தீக்குளித்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் முன் தீக்குளித்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி முள்ளக்காடு காந்தி நகரைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் சுவிசேஷ ராஜ் (42). இவா், தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தாா். அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் தொழிலை கைவிட்டுவிட்டாராம். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

அக். 2ஆம் தேதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் உறவினா்கள், இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக இவா், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் இவரது மனைவியின் தங்கை கணவா் மாசானமுத்து உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் காவல் நிலையத்துக்கு வந்த சுவிசேஷ ராஜ், தன்னை தாக்கியவா்களை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என கூறி காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்தாராம்.

பின்னா் இவா், காவல் நிலையம் முன், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். இதில் பலத்த தீக்காயமடைந்த சுவிசேஷ ராஜை போலீஸாா் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com