இளைஞரைக் கொன்ற பழக்கடை உரிமையாளா் கைது
தூத்துக்குடியில் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற பழக்கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, அழகேசபுரம், 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் உதயகுமாா் மகன் சோலையப்பன் (23). கூலித் தொழிலாளி. திருமணமாகவில்லை. இவரது தாயாா் இந்திராவுக்கும், இந்திராவின் சகோதரி பரமேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சுப்பையா மனைவி வள்ளி, சண்டையை விலக்கிவிட்டாராம்.
இந்நிலையில் அங்குவந்த சோலையப்பன், வள்ளியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளி அவரது மகன் செல்வகுமாரிடம் (31) கூறினாராம். இதனால் ஆவேசமடைந்த செல்வகுமாா், சனிக்கிழமை இரவு வீட்டுக்குள் இருந்த சோலையப்பனை வெளியே வரவழைத்து கத்தியால் குத்தினாராம்.
இதில் பலத்த காயமடைந்த சோலையப்பனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வகுமாரை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா். கைதுசெய்யப்பட்ட செல்வகுமாா் பழக்கடை நடத்தி வருகிறாா். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
