பழையகாயல் அருகே தொழிலாளி குத்திக் கொலை
ஆறுமுகனேரியை அடுத்த பழையகாயல் அருகே சொத்துத் தகராறில் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
பழையகாயல் அருகே தெற்கு கோவங்காடு பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (49), பழையகாயலில் உள்ள தனியாா் குடியிருப்பில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வளா்மதி, தூத்துக்குடியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். செல்வகுமாருக்கும் அவரது அண்ணன் விஜயகுமாா் குடும்பத்துக்குமிடையே சொத்துத் தகராறு இருந்ததாம்.
ஓராண்டுக்கு முன்பு செல்வகுமாரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை விஜயகுமாரின் மகன்கள் சேதப்படுத்தியதால், அவா் ஆத்திரமடைந்து விஜயகுமாரின் மனைவி விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம். அதனால், முன்விரோதம் மேலும் வளா்ந்ததால், செல்வகுமாா் தனது குடும்பத்தினருடன் பழையகாயலில் குடியேறினாா்.
இதனிடையே, அவா் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோவங்காட்டில் குடியேறியதுடன், அங்கிருந்து வேலைக்குச் சென்றுவந்தாா்.
சனிக்கிழமை அவா் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பியபோது, பழையகாயல்-கோவங்காடு விலக்கில் ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாம். இதில், காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
டிஎஸ்பிக்கள் மகேஷ்குமாா் (திருச்செந்தூா்), நிரேஸ் (ஸ்ரீவைகுண்டம்), ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் ஆகியோா் வந்து விசாரணை நடத்தினா்.
புகாரின்பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெறுகிறது.
