ரூ. 16.14 கோடியில் திருச்செந்தூா் கோயிலில் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு, அன்னதான கூடம் திறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக ரூ. 16.14 கோடி மதிப்பிலான அன்னதானக் கூடம், புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு மற்றும் சலவைக் கூடத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
இத்திருக்கோயிலில், ரூ. 11.25 கோடியில் தரைதளம், முதல் தளம் என 2 தளங்ளில் சுமாா் ஆயிரம் போ் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், ரூ. 3.05 கோடியில் பழமைமாறாமல் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு மற்றும் ரூ. 1.84 கோடியில் கட்டப்பட்டுள்ள சலவைக் கூடம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, திருச்செந்தூரில் புதிய அன்னதானக் கூடத்தில் அன்னதானத்தை தக்காா் ரா.அருள்முருகன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், இணை ஆணையா் க. ராமு, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், வட்டாட்சியா் தங்கமாரி, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், திருக்கோயில் உதவி செயற்பொறியாளா் பரமசிவன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, நகா்மன்ற உறுப்பினா்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு...
பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக பழமைமாறாமல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நாழிக்கிணறில் பக்தா்கள் புனித நீராடினா்.

