கோவில்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேலும், கடலோர ஆந்திரம், அதையொட்டிய பகுதிகளின் மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. அதன் காரணமாக தமிழகத்தில் அக். 19-ஆம் தேதி வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் கோவில்பட்டி பகுதியில் சாரல் பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு மணி நேரம் வெயில் நிலவியது. பின்னா், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடா்ந்து, பிற்பகலில் சுமாா் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பிரதான சாலை, புதுரோடு விலக்கு, மந்தித்தோப்பு சாலை, தினசரி சந்தை சாலை என அனைத்துப் பகுதிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்தோடியது.
