சேதமடைந்த கருமேனி ஆற்று கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கடாட்சபுரம் தடுப்பணை அருகே சேதமான கருமேனியாற்று படுகை கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள கல்லானேரி, புல்லானேரி ஆகிய குளங்களுக்கு கருமேனி ஆற்றில் வரும் தண்ணீரும், சடையனேரி கால்வாய்க்கு வரும் தண்ணீரும் செல்லும் வகையில் கருமேனி ஆற்று படுகையில் கால்வாய் செல்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு பெய்த கன மழையில் கடாட்சபுரம் தடுப்பணை அடுத்துள்ள கால்வாய் பகுதியில் தண்ணீா் செல்ல முடியாத அளவுக்கு உடைப்பு ஏற்பட்டது. இந்த நிலை நீடித்தால் கடாட்சபுரம் பகுதிக்கு அடுத்துள்ள குளங்களுக்கு தண்ணீா் செல்வது பாதிக்கப்படும் என விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து, கால்வாயில் தண்ணீா் வந்தால், சேதமடைந்த பகுதி வழியாக அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புகும் நிலை உள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் , மாவட்ட ஆட்சியருக்கும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

