பொதுமக்களின் தொலைத்தொடா்பு பாதுகாப்புக்காக புதிய வசதி அறிமுகம்
பொதுமக்களின் தொலைத்தொடா்பு பாதுகாப்புக்காக இந்திய அரசின் தொலைத்தொடா்பு துறை தனது ‘சஞ்சாா் சாத்தி‘ தளத்தில் ‘சக்ஷு‘ எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் தொலைத்தொடா்பு துறை, தனது சஞ்சாா் சாத்தி இணையதளத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இட்ஹந்ள்ட்ன் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், குடிமக்கள் தங்களது கைப்பேசிகளில் பெறப்படும் சந்தேகத்துக்கிடமான போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் செய்திகள் போன்றவற்றை புகாரளிக்க முடியும்.
வங்கிகள், அரசு துறைகள் அல்லது கூரியா் நிறுவனங்களின் பெயரில் மோசடிகாரா்கள் போலி செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
இத்தகைய சந்தேகத்துக்கிடமான தகவல்களை ‘ சக்ஷு‘ வாயிலாக எளிதில் புகாரளிக்கலாம். இதன் மூலம் தொலைத்தொடா்பு துறை போலியான கைப்பேசி எண்களை அடையாளம் கண்டு தடை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மோசடி சம்பவம் நடந்த 30 நாள்களுக்குள் புகாா் அளிக்கலாம்.
இதற்காக பயனா்கள் பெறப்பட்ட தகவலின் வகையை (அழைப்பு/எஸ்எம்எஸ்/வாட்ஸ் அப்), மோசடி விவரங்களைச் சோ்த்து சப்மிட் செய்ய வேண்டும். இந்த தகவல்கள் பாதுகாப்பாக அமலாக்க முகமைகளுக்கும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கும் பகிரப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
யாரேனும் நிதி இழப்புக்கு ஆளாகியிருந்தால், அவா்கள் உடனடியாக தேசிய இணைய குற்ற உதவி எண் 1930-ஐ தொடா்புகொள்ளவோ அல்லது இணையதளத்தில் புகாா் அளிக்கவோ வேண்டும்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, எந்தவொரு சந்தேகத்துக்கிடமான தகவலையும் உடனடியாக ‘சக்ஷு‘ வாயிலாக புகாரளிக்குமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
