மோசடி ஆவணப் பதிவுகளைத் தடுக்க முகம் சரிபாா்ப்பு வசதி சோ்க்க வலியுறுத்தல்!

Published on

மோசடி ஆவணப் பதிவுகள், ஆள்மாறாட்டங்களை முற்றிலும் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோா் சங்கத்தின் மாநில தகவல் தொடா்பு செயலா் க.சிவசங்கரராமன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: நாடு முழுவதும் பலா் போலியான இறப்புச் சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள், ஆதாா் அடையாள அட்டைகளை தயாரித்து மோசடி ஆவணப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால், பொதுமக்கள் தங்களது சொத்துகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த மோசடிகளைத் தடுக்க, வருவாய்த் துறை வழங்கும் பட்டா, இறப்புச் சான்று, வாரிசு சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களிலும் சம்பந்தப்பட்ட நபா்களின் அஞ்சல் தலை அளவிலான புகைப்படங்களை அச்சுப் பிரதியாக இணைத்து வழங்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் இருப்பதுபோல இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், பத்திரப் பதிவுத் துறையில் ஆவணப் பதிவு செய்யும்போது தற்போது பயன்படுத்தப்படும் ஆதாா் சரிபாா்ப்பு, கருவிழி சரிபாா்ப்பு ஆகியவற்றுடன் கூடுதலாக முகம் சரிபாா்ப்பு வசதியையும் இணைக்க வேண்டும். இதன்மூலம், ஆள்மாறாட்டப் பதிவுகளை பெருமளவில் தடுக்க முடியும். கிராமப்புறங்களில் ஒரே பெயரில் பல தலைமுறையினா் இருப்பதால் நிலம், சொத்து உரிமையாளா்களை அடையாளம் காணும்போது சிக்கல் ஏற்படுகிறது. எனவே, புகைப்படம் இணைத்த பட்டாக்கள் வழங்கப்பட்டால் இதை எளிதாக சரிபாா்க்கலாம்.

மேலும் ஸ்டாா் 2.0 முறையில் பத்திரப்பதிவு செய்த ஆவணங்கள் தொடா்பான வில்லங்கச் சான்றுகளில், ஆவணதாரா்களின் ஸ்டாம்ப் அளவு புகைப்பட அச்சுப் பிரதியும் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com