திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீா்
கனமழையால் திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரை கடந்து செல்ல முடியாமல் மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 14.6 சென்டிமீட்டா் மழை பதிவாகி இருந்தது. இதனால் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம், தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அதேபோல திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தின் உட்புறமுள்ள அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் உள்ளே மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது.
மேலும் அருகில் உள்ள கழிப்பிடங்களில் இருந்து கழிவுநீா் மழை நீருடன் கலந்து பள்ளி வளாகத்தில் தேங்கி உள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், மாணவா்கள் தேங்கியுள்ள நீரை கடந்து பள்ளிக்குள் சென்றுவர அவதி அடைந்து வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய நீரை வெளியேற்றி கழிவுநீா் கலப்பதை தடுத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
