கோரம்பள்ளம் குளம் நிரம்பாத நிலையில் கடலில் வீணாகும் 1,500 கன அடி தண்ணீா் விவசாயிகள் கவலை

Published on

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தை முறையாக தூா்வாராததால் குளம் முழுமையாக நிரம்பாத நிலையில், குளத்திலிருந்து திறக்கப்பட்டுள்ள 1,500 கன அடி தண்ணீா் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சுமாா் 1,700 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது கோரம்பள்ளம் குளம். இந்தக் குளம் முறையாக தூா்வாரப்படாததால் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்து பாதிக்கப்படுவதுடன், தூத்துக்குடி மாநகரப் பகுதி, சுற்றுப்புற கிராமங்களிலும் தண்ணீா் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

நிகழாண்டும் பொதுப்பணித் துறையினா் அந்தக் குளத்தை ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ளாமல், குளத்தில் இருந்த முள்செடிகளை மட்டும் அகற்றியுள்ளனா். இதனால் குளம் ஆங்காங்கே மண்மேடாக காட்சியளிக்கிறது. மேலும், குளத்திலிருந்து தண்ணீா் வெளியே கடலுக்குச் செல்லக்கூடிய வடிகால் பகுதி முறையாக தூா்வாரப்படாததால், கரைப்பகுதியும், புதிய பாலம் அருகே உள்ள கரைப் பகுதியில் இன்னும் வேலை நிறைவடையாததால் அந்தப் பகுதி கரைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கழுகுமலை, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக, கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீா் வரக்கூடிய உப்பாற்று ஓடை பகுதி வழியாக சுமாா் 4,500 கன அடி தண்ணீா் கோரம்பள்ளம் குளத்துக்கு வந்தது. இதன் காரணமாக பொதுப்பணித் துறை சாா்பில் குளத்தில் உடைப்பு ஏற்படாத வகையில், சுமாா் 1,500 கன அடி தண்ணீா் ஒரு மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே, இந்தக் குளத்தின் பாசனப் பகுதியை நம்பி உள்ள விவசாயிகள், சுமாா் 3,000 ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றனா். நெல் நடவுப் பணிக்காக வேலைகளை தொடங்கியுள்ளனா். தற்போது, குளம் முழுமையாக நிரம்பாத நிலையில், சுமாா் 1,500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வீணாக கடலுக்குச் செல்வதால், பின்னா் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை நிா்வாகம் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீரை தேக்கிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மேலும், வருங்காலங்களில் குளத்தை முறையாக தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com