சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட, தடை செய்யப்பட்ட விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சீன துறைமுகமான நிங்போவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் பெங்களூருவை சோ்ந்த ஒரு நிறுவனத்துக்கு அடுத்தடுத்து 4 கண்டெய்னா்கள் வந்திருந்தன. அந்த கண்டெய்னா்களில் தலைக்கவசங்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில், சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 4 கண்டெய்னா்களையும் சோதனையிட்டனா். அப்போது, அவற்றில் அனுமதியின்றி சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட விளையாட்டு பொம்மைகள், ஷூக்கள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை இந்தியாவுக்குள் கொண்டு வர உரிய தரச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டிய நிலையில், இவை அனைத்தும் தரமற்றவை என்பதால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ. 7 கோடி.
இது குறித்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
