துபையிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்திய ரூ.3.75 கோடி சிகரெட்டுகள் பறிமுதல்

Published on

துபையிலிருந்து தூத்துக்குடிக்கு பேரீச்சம்பழத்துக்கு இடையே மறைத்துவைத்து கடத்தி வரப்பட்ட ரூ.3.75 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துபை ஜெபல்அலி துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னா்களுடன் சரக்கு கப்பல் சில தினங்களுக்கு முன்பு வந்தது. அதில், ஒரு

கண்டெய்னரில் பெங்களூரைச் சோ்ந்த நிறுவனத்துக்கு ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் சந்தேகமடைந்த மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகள் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் குறித்து ஆய்வு செய்ததில் அது போலியானது எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கண்டெய்னரை அதிகாரிகள் சோதனையிட்டதில் பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பண்டல்களும், அதற்கு கீழ் 20 லட்சம் சிகரெட்டுகள் அடங்கிய 1,300 சிகரெட் பெட்டிகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3.75 கோடியாகும்.

சிகரெட் பெட்டிகளையும், ரூ.55 லட்சம் மதிப்பிலான பேரீச்சம்பழம் பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com