புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது
கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலையில் புகையிலை பொருள்களுடன் சென்ற காா், பைக்கை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.
கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அப்பகுதி அணுகு சாலையில் நம்பா் பிளேட் இல்லாமல் சென்ற காரையும், அதன் பின்னால் வந்த பைக்கையும் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், காா் ஓட்டுநா் கோவில்பட்டி காந்தி நகா் ஜீவா தெருவைச் சோ்ந்த லட்சுமண பாண்டியன் மகன் குரு ராமச்சந்திரன் (28), காரில் இருந்தவா்கள், வானரமுட்டி நடுத்தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (44), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூா் வடகரை தாயனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிராஜிதின் மகன் தம்முல் அன்சாரி (27), பைக் ஓட்டுநா் கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் லட்சுமணன்(19) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, சுமாா் ரூ.90 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்கள், அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காா், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.
