சுமை ஆட்டோ - காா் மோதல்: ஒருவா் பலி
கயத்தாறு அருகே சுமை ஆட்டோ மீது காா் மோதியதில், சுமை ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி வட்டம் இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் மகன் ஜெபசீலன்(22). கயத்தாறில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவா், தன்னுடன் வேலை செய்யும் அரசன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் முருகன்(45) ஓட்டிய சுமை ஆட்டோவில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம்.
சுமை ஆட்டோ வடக்கு இலந்தைகுளம் விலக்கில் திரும்ப முயன்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியைச் சோ்ந்த குமாரசாமி மகன் சுப்பிரமணியன் ஓட்டி வந்த காா், சுமை ஆட்டோவின் பின்புறம் மோதியதாம்.
இதில், சுமை ஆட்டோ கவிழ்ந்து பலத்த காயமடைந்த ஓட்டுநா் முருகன், ஜெபசீலன் ஆகிய இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் முருகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
ஜெபசீலன் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்குச் சென்றாா். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
