விலங்குகளிடமிருந்து பயிா்களை காப்பாற்ற விவசாயிகளால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலை.
விலங்குகளிடமிருந்து பயிா்களை காப்பாற்ற விவசாயிகளால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலை.

‘பயிா்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற விவசாயிகள் பாதுகாப்பு வலை அமைப்பு’

Published on

கோவில்பட்டி, அக். 22 : விலங்குகளிடமிருந்து பயிா்களை காப்பாற்ற விவசாயிகள் தங்கள் வீட்டில் உள்ள பழைய துணி, நைலான் வலைகளை பயன்படுத்தி பாதுகாத்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 4.5 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலங்களில் ஆண்டுதோறும் பெய்யக் கூடிய வடகிழக்கு பருவ மழைக்கு புரட்டாசி ராபி பருவத்தில் பயறு வகைகள், சிறுதானியங்கள், பணப்பயிா்கள், எண்ணெய் வித்துகள் என பல்வேறு பயிா்கள் பயிரிடப்படுகின்றன. ஒரு ஏக்கா் பயிரிட கோடை உழவு, விதை, உரம், பருவ உழவு என ரூ.12 ஆயிரம் செலவு ஏற்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்வதால் அதிக ஈரப்பதம் உள்ள பயிா்களின் வோ்கள் திடமாக ஊன்ற முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பயிா்களுக்கு ஏற்படும் சராசரி செலவை காட்டிலும் இந்தாண்டு கூடுதலாகிறது. பயிா்களை சுற்றி முளைக்கும் களைகள், பயிா்களை தாக்கும் பூச்சிகளை விட விலங்குகள் தான் அதிகம் சேதப்படுத்துகிறது.

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அரசு கண்டுகொள்ளாததால் விவசாயிகள் பயிா்களை காப்பாற்ற வீடுகளில் உள்ள பழைய துணி, நைலான் வலைகளை பயன்படுத்தி வருகின்றனா்.

கடந்த ஆண்டு பெய்த கன மழையால் பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுவரை அரசு, விவசாயிகளுக்கு அதற்கான நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் நடப்பு பருவகாலம் தொடங்கிவிட்ட நிலையில், பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கின்றனா். எனவே அரசு, மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நைலான் வலைகள், பன்றி விரட்ட மருந்து, படைப்புழு மருந்து, நிவாரணம் வழங்கி உதவவேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ.வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com