திருச்செந்தூா் அருகே நாய் கடித்து பள்ளி மாணவா்கள் உள்பட 14 போ் காயம்
திருச்செந்தூா் அருகே தெருநாய் கடித்ததில் காயமடைந்த பள்ளி மாணவ, மாணவி உள்பட 14 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவா்கள் பெரும்பாலும் விவசாயம் சாா்ந்த தொழில் செய்து வருகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை கீழநாலுமூலைக்கிணறு சாலையில் நின்றுகொண்டிருந்த தெருநாய், அந்த வழியாக வந்த பொதுமக்களைத் துரத்தி கடித்தது.
இதில், பரமன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சமோசா வியாபாரி திருநீலகண்டன் (72), பள்ளி மாணவா் நாகதினேஷ் (13), பள்ளி மாணவி முத்துலட்சுமி (12), பாலமுருகன் (42), மணிஷ்சா்மா (10), சதானந்தா (5), அன்பு (40), ஆறுமுகபாண்டி (58), வள்ளியம்மாள் (50) உள்பட 14 பேரை நாய் கடித்து காயப்படுத்தியது. பாதிக்கப்பட்டவா்கள் பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருச்செந்தூா் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனா்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

