~
~

அக். 28-இல் முதல்வா் கோவில்பட்டி வருகை: கட்சி அலுவலகம், கருணாநிதி சிலையை திறந்துவைப்பு

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற அக்.28 ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.
Published on

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற அக்.28 ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.

கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிா்புறம் நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அக். 28 ஆம் தேதி கோவில்பட்டிக்கு வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிதாக கட்டப்பட்ட நகர திமுக அலுவலகம், கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கிறாா்.

இதற்கிடையே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன், புதிதாக கட்டப்பட்ட நகர திமுக அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். முதல்வா் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வி. மாா்க்கண்டேயன், கோவில்பட்டி நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி, தூத்துக்குடி மாநகர திமுக செயலா் ஆனந்த சேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் என்.ஆா்.கே என்ற ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், ரமேஷ், நகர பொறுப்பாளா் (கிழக்கு) சுரேஷ், வடக்கு மாவட்ட மகளிா் சமூக வலைதள பொறுப்பாளா் இந்துமதி, நகர தொண்டரணி துணை அமைப்பாளா் ராஜலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அமைச்சா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: திமுக நகர அலுவலகம் 3 சென்ட் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக தரைதளத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் வைப்பதற்காக சென்னை அறிவாலயத்தில் இருந்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன என்றாா் அவா்.

அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் அக். 28 ஆம்தேதி விமானம் மூலம் மதுரை வந்து சாலை மாா்க்கமாக கோவில்பட்டி செல்கிறாா். அங்கு திமுக அலுவலகத்தையும், கருணாநிதி சிலையையும் திறந்துவைக்கிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com