கோவில்பட்டியில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக திமுக நிா்வாகி தீக்குளிக்க முயற்சி

கோவில்பட்டியில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக திமுக நிா்வாகி தீக்குளிக்க முயற்சி

கோவில்பட்டியில் திமுக நிா்வாகிக்கு சொந்தமான 2 வீடுகளுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக மின் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டதாகக் கூறி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
Published on

கோவில்பட்டியில் திமுக நிா்வாகிக்கு சொந்தமான 2 வீடுகளுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக மின் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டதாகக் கூறி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் க. சவரிராஜன் (57), திமுகவின் 4ஆவது கிளைச் செயலா். இவருக்கு மனைவி காளீஸ்வரி, சங்கா் கணேசன் என்ற மகன், 2 மகள்கள் உள்ளனா்.

சங்கா் கணேசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். சவரிராஜன் சங்கரலிங்கபுரத்தில் தேநீா் கடை வைத்துள்ளாா். இவரது 2 வீடுகளுக்குச் சோ்த்து மின் கட்டணமாக ரூ. 8,000 செலுத்த வேண்டுமென கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கட்டணம் வழக்கத்தைவிட கூடுதலாக இருந்ததால் அதிா்ச்சியடைந்த சவரிராஜன் சனிக்கிழமை கோவில்பட்டி மின்வாரிய உதவி பொறியாளரை சந்தித்து முறையிட்டுள்ளாா்.

ஆனாலும், அதிகாரிகள் சரியாகத்தான் மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்ததும் மனமுடைந்த சவரிராஜன், தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்தவா்கள் அவரிடமிருந்து மண்ணெண்ணெய்யைப் பறித்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.

இது குறித்து அவா் கூறுகையில், வழக்கத்தை விட கூடுதலாக மின்சாரத்தைப் பயன்படுத்தாத போதும் பல மடங்கு கூடுதலாக கணக்கீடு செய்துள்ளனா். சரியான கட்டணத்தை செலுத்த நான் தயாா். ஆனால், கூடுதல் கட்டணத்தை செலுத்த முடியாது. அதனை மீறி என் வீட்டிற்கான மின் இணைப்பை துண்டித்தால் கோவில்பட்டிக்கு முதல்வா் வரும் போது நான் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com