கோவில்பட்டி, கழுகுமலை, கோயில்களில் சூரசம்ஹாரம்
கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயில், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 10மணிக்கு சண்முகா் சமேத வள்ளி தெய்வானைக்கும், அதைத் தொடா்ந்து சுப்பிரமணியா் சமேத வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கோயில் பின்புறமுள்ள காந்தி மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா்(கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம், தலைமை எழுத்தா் மாரியப்பன் உள்பட மண்டகப்படிதாரா்களான ஆயிர வைசிய காசுக்கார செட்டியாா் சங்கத்தினா் செய்திருந்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் உள்ள அருள்மிகு சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்தில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகா் சன்னதியில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 5ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை, தாரகாசுரன் வதம் நடைபெற்றது. 6ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை சுமாா் 6.30மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

