பாரத ஸ்டேட் வங்கி திருச்சி கிளையில் வரலாற்று மையம் திறப்பு

திருச்சி, ஜூலை 28:  பாரத ஸ்டேட் வங்கியின் திருச்சி கிளையில் வங்கியின் பாரம்பரியமிக்க தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் கொண்ட வரலாற்று மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.  கடந்த 1806 ஆம் ஆண்டில் "பேங்க்

திருச்சி, ஜூலை 28:  பாரத ஸ்டேட் வங்கியின் திருச்சி கிளையில் வங்கியின் பாரம்பரியமிக்க தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் கொண்ட வரலாற்று மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

 கடந்த 1806 ஆம் ஆண்டில் "பேங்க் ஆப் கல்கத்தா' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வங்கி 1809 ஆம் ஆண்டு ஜன. 2-ம் தேதி பேங்க் ஆப் பெங்கால் எனவும், 1840 ஆம் ஆண்டு ஏப். 15-ம் தேதி பேங்க் ஆப் பாம்பே எனவும் தொடங்கப்பட்டன.

 பின்னர், 1843 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பாங்க் ஆப் மதராஸ் என்ற பெயரிலும் தொடங்கப்பட்டது. இந்த வங்கிகளை ஒருங்கிணைத்து 1921 ஆம் ஆண்டு ஜன. 27-ம் தேதி இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயருடன் இயங்கி, 1955 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பாராளுமன்றச் சட்டத்தின்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 இந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இம்மையத்தில் புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

 மேலும், இம்பீரியல் வங்கியில் ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, தாதாபாய் நெüரோஜி, பெரோஸ்ஷா மேத்தா, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் வைத்திருந்த நடப்புக் கணக்கு தொடர்பான பதிவேடுகள் இந்த மையத்தில் இடம் பெற்றுள்ளன.

 நம் நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜே.ஆர்.டி. டாடா ஆகியோர் இம்பீரியல் வங்கியில் நடப்புக் கணக்குத் தொடங்குவது தொடர்பாக அளித்த விண்ணப்பப் படிவங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

 தவிர, இம்பீரியல் வங்கியில் 1916 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை நிர்வகிக்கப்பட்ட கணக்குப் பதிவேடுகள், இந்த வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டுகள், வரைவோலை நகல்கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

 பாங்க் ஆப் பெங்கால், பாங்க் ஆப் பாம்பே, பேங்க் ஆப் மதராஸ் கட்டடங்கள் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கடந்த 1867 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட திருச்சி கிளையின் புகைப்படம் போன்றவையும் உள்ளன.

 இந்த மையம் வங்கிக்கு வரும் நுகர்வோரின் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது. சற்று தொலைவிலிருந்து கண்ணாடி வழியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வங்கி உதவிப் பொது மேலாளர் கே. ராமச்சந்திரன் தெரிவித்தார்.

 இந்த மையத்தை வங்கியின் சென்னை வட்டார முதன்மைப் பொது மேலாளர் ஜே. சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com