தஞ்சாவூர் பகுதியில் கண்டறியப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் வாழ்விடம்

தஞ்சாவூர், மே 10:  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களின் வாழ்விடத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என தெரிவித்தார் பல்கலைக்கழகத் துண

தஞ்சாவூர், மே 10:  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களின் வாழ்விடத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என தெரிவித்தார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 பல்கலைக்கழக நல்கை நிதிக் குழு உதவியுடன் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் வீ. செல்வக்குமார் தலைமையில் "தென் தமிழகத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட கால நிலவைப்பு தொல்லியல்' என்ற ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 அப்போது பழங்கற்கால, இடைக்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களின் வாழ்க்கை முறையை குறித்து புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

 இந்த அகழாய்வில், பழங்கற்கால மற்றும் நுண் கற்காலத் தடயங்கள், மண்ணடுக்காய்வு முறையில் வெளிப்பட்டுள்ளது.

 பழங்கற்காலக் கருவிகளான சுரண்டிகள், செதில் கருவிகள் போன்றவை நான்காவது மண்ணடுக்கில் கிடைத்துள்ளன. தஞ்சாவூர் பகுதியில் பழங்கற்கால கருவிகள் மண்ணடுக்குகளில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 இந்த பழங்கற்கால கருவிகள் 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவையாகும். இவற்றின் காலத்தை அறிவியல் முறைப்படி ஆராய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 2-வது மண்ணடுக்கில் கிடைத்துள்ள நுண் கற்கால சுரண்டிகள், முக்கோன வடிவ மற்றும் கூர்முனைக் கருவிகள் ஆகியவை பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுள்ளன. இடைக்கற்கால மக்கள் பழங்கற்காலத்தை தொடர்ந்தும் வாழ்ந்து வந்தனர். இந்த மக்கள் இன்றிலிருந்தே 1,000-த்திலிருந்து 3,000 ஆண்டுகளில் வேட்டையாடு உணவுகளைச் சேகரித்து வாழ்ந்திருக்கின்றனர்.

 இவர்கள் விவசாயம், ஆடு, மாடு, வளர்ப்பு, உலோகம், பானை செய்தல் ஆகியவற்றை அறிந்திருக்கவில்லை. இக்கால மண்ணடுக்கில் நீர் ஓடும் சிறிய வாய்க்கால் மற்றும் குழியின் ஒரு பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. இவை மழை நீரை சேமிப்பதற்காக அந்த காலத்தைச் சேர்ந்த மக்களால் தோண்டப்பட்டிருக்கலாம்.

 இது தொடர்பான விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சென்னைக்கு அருகில் கொற்றலையாற்று பள்ளத்தாக்கில் மட்டும் இது போன்ற தடயங்கள் கிடைத்தள்ளன. தர்மபுரியில் பேராசிரியர் ராஜன் தலைமையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழாய்வு இத்தயை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த தடயங்களை வெளிப்படுத்தியுள்ளன.

 தமிழக அரசு தொல்லியல் துறையால் நுண்கற்கால கருவிகள் மாங்குடி மற்றும் தேரிருவேலி ஆகிய இடங்களில் அகழாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட தரை மேற்பரப்பாய்வுகளில் 100-க்கும் மேற்பட்ட இடைக்கற்கால இடங்கள் மற்றும் 5 பழங்கற்கால இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com