திருச்சி, டிச. 11: திருச்சி மாவட்டத்தில் உதவி உபகரணங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் 1,286 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.
திருச்சி 1-வது சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளிக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மறுமதிப்பீட்டு முகாம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார். முகாமைத் தொடக்கிவைத்து அமைச்சர் நேரு பேசியது:
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ரூ. 5 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை நடைபெற்ற முகாம்களில் ஏறத்தாழ 2,000 பேர் கலந்து கொண்டனர். இவர்களில், 1,286 பேர் உதவி உபகரணங்கள் பெற தகுதி பெற்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் உபகரணங்கள் வங்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியின் போது, கீழரண் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறன் படைத்த மாணவி ஆ. அன்னபூரணி வரைந்த முதல்வர் கருணாநிதியின் படத்தைப் பார்த்து ரசித்த அமைச்சர், அந்த மாணவியை பாராட்டினார்.
இந்த முகாம் குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரா. சியாமளா கூறியது:
இந்த முகாமில் மொத்தம் 158 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் கை, கால் குறைபாடு உள்ளவர்கள் 117 பேர். மனவளர்ச்சி குன்றியவர்கள் 12 பேர். காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் 28 பேர். ஒருவர் பார்வையற்றவர்.
இவர்களில், 80 பேர் மட்டுமே உபகரணங்கள் பெறுவதற்கு தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டனர்.
இதுவரை நடைபெற்ற முகாம்களில் பங்கேற்காதவர்கள் யாரேனும் இருந்தால், நீதிமன்ற வளாகத்தின் பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றார் அவர்.