திருச்சி, டிச. 11: விழுப்புரம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஹவுரா- திருச்சி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம்- திருவெண்ணெய்நல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது, ரயிலில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சக்திவேல் தவறி கீழே விழுந்துவிட்டார். உடனே, அவருடன் பயணம் செய்த இளைஞர் சசீந்திரன், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி கீழே இறங்கினார்.
சுமார் 2 கி.மீ. தொலைவு வரை தேடிச் சென்றும் சக்திவேலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, ரயில் புறப்பட்டு சென்றுவிட்டது. அப்போது, அந்தப் பகுதியிலிருந்த "லெவல் கிராசிங் கேட்மேன்' பிரேம்குமாரிடம், சக்திவேல் தவறி விழுந்த விவரத்தை சசீந்திரன் கூறினார்.
இதையடுத்து, இருவரும் சேர்ந்து சக்திவேலைத் தேடினர். அப்போது, அந்தப் பகுதியிலிருந்த பாலத்தின் அடியில் சக்திவேல் கிடப்பது தெரிந்தது. பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்த அவரை மீட்டு இருவரும் மேலே கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக திருச்சியில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு பிரேம்குமார் தகவல் கொடுத்தார். இதையடுத்து, அந்த நேரத்தில் அந்த வழியாகச் செல்லவிருந்த சேலம்- விழுப்புரம் ரயில் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனுக்கு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து துணை மேலாளர் மோகன்குமார் தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து, சக்திவேல் அந்த ரயிலில் ஏற்றப்பட்டு, விழுப்புரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சக்திவேலை உரிய நேரத்தில் மீட்க உதவிய "கேட்மேன்' பிரேம்குமார், தகவலை உரிய நேரத்தில் கொடுத்த மோகன்குமார், ரயில் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டினர்.