"சமூகப் பொருளாதார மாற்றங்களை உருவாக்கும் கல்வியே முழுமை பெறும்'
புதுக்கோட்டை, டிச. 18: சமூகப் பொருளாதார மாற்றங்களை உருவாக்கப் பயன்படும் கல்வியே முழுமை பெறும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. மீனா.
புதுக்கோட்டை அருகேயுள்ள சிவபுரம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:
கல்லூரிக் கல்வியைக் கடந்து விட்ட நீங்கள் மேல்படிப்பைத் தொடரவோ, போட்டித் தேர்வை எழுதவோ, பணிக்குச் செல்லவோ நல்ல வாய்ப்புள்ள சூழலில், அதை உங்கள் திறமையால் மட்டுமே பெற முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது கல்வி முறையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அடிப்படைக் கல்வியறிவு நடைமுறைக்கு உதவாது என்பதால், நாம் கற்றதைக் கொண்டு ஆராய்ச்சி செய்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போதுதான் பொருளாதாரம் உயர்ந்து, சமூக மாற்றம் ஏற்படும். எனவே, உங்கள் நலனைக் காக்கவும், செல்வம் சேர்க்கவும் கல்வியறிவைப் பயன்படுத்தும் அதே வேளையில், சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்கும் முயற்சி செய்வது உங்களது கடமையாகும். சமூக அக்கறை, வறியவர்களுக்கு உதவி செய்தல், சேவை, தியாக மனப்பான்மை ஆகியவை மட்டுமே உலக அளவில் பல அழியாப் புகழ் பெற்ற மனிதர்களை உருவாக்கியுள்ளன.
எனவே, நீங்கள் பெற்ற கல்வி, நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்குப் பங்களிக்கும்போதுதான் அது முழுமை பெறும் என்றார் அவர்.
இந்த விழாவில், இளநிலையில் 403 பேரும், முதுநிலையில் 210 பேரும், ஆய்வியல் நிறைஞர்கள் 18 பேரும் உள்பட மொத்தம் 631 பேர் பட்டங்களைப் பெற்றனர். இதில், பல்கலைக்கழக அளவில், 43 மாணவ, மாணவிகள் தரச் சான்றும், பல்கலைக்கழ அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 7 மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கங்களையும் பெற்றனர். விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜ. பரசுராமன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் எஸ். வள்ளியப்பன், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தெ. திருஞானமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் பி. குணசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. முத்துச்சாமி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரி நிர்வாக அறங்காவலர் எஸ். கவிதா வரவேற்றார். செயலர் என். நிகழ்வுகளைத் சுப்பிரமணியன் தொகுத்தளித்தார்.