வேதாரண்யம், டிச. 18: நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 36 ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தமிழக அரசின் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அடையாள அட்டைகள் அளிக்கும் விழா 4 மையங்களில் சனிக்கிழமை நடந்தது.
வேதாரண்யம் எஸ்.கே.எஸ்,வி.வி அரங்கம், செம்போடை வரதராசன்- ருக்மணி அரங்கம், மருதூர் கந்த பவுண்ராஜ் அரங்கம், ஆயக்காரம்புலம் காசி வீரம்மாள் அரங்கம் ஆகிய 4 இடங்களில் நடந்த விழாக்களுக்கு நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமை வகித்தார்.
சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.கே. வேதரத்தினம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பத்மாவதி செகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாக்களில் பங்கேற்ற தமிழக வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, 16,707 பயனாளிகளுக்கு தகுதி அடையாள அட்டைகளை வழங்கி பேசும்போது, தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அளிக்கப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக மீண்டும் ஆட்சியில் அமர வாய்ப்பளித்தால், கலைஞர் வீடு கட்டும் திட்டத்துக்கு அளிக்கப்படும் தொகையான 75 ஆயிரத்தையும் இரட்டிப்பாக வழங்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சிகளில் நகர்மன்றத் தலைவர் மா. மீனாட்சிசுந்தரம், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் செ. யூசுப், உறுப்பினர் சி. ஆனந்தராசு, தொலைத் தொடர்பு துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ச. குமரவேல், மா.மீ. புகழேந்தி, ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். வரதராசன், மாவட்டத் திட்ட இயக்குநர் எஸ். நாமகிரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரெ. மூர்த்தி, அ. அன்புதுரை மற்றும் ஒன்றியக் குழு உறுóபினர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.