அரியலூர், டிச. 26: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீசுவரர் கோயில் வளாகத்தில் சுற்றுலாத் துறை சார்பில், ஐனவரி 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கிராமிய கலை விழா நிகழ்ச்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 33 பேருக்கு முதியோர் உதவித் தெகை, 20 பேருக்கு திருமண உதவித் தொகை, 7 பேருக்கு விதவை உதவித் தொகை, 2 பேருக்கு ஆதரவற்றோர் விவசாய கூலி உதவித் தொகை, 14 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, ஒருவருக்கு இயற்கை இடர்பாடு நிவாரண உதவித் தொகையாக ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில் ஆட்சியர் பேசியது:
அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சி தேவாலயம், கள்ளங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் தமிழகத்தின் பாரம்பரிய கலை, கலாசார வளமையை உலகுக்கு உணர்த்திடும் வகையில், கங்கைகொண்டசோழபுரம் கோயில், உலகச் சுற்றுலா செல்வங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தப் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில், கங்கைகொண்டசோழபுரம் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தலமாகவும், தஞ்சை பெரிய கோயிலின் பிரதிபலிப்பாக, இந்தக் கோயில் கி.பி. 1012-14 ஆம் ஆண்டுகளில், ராசராச சோழனின் மைந்தனான ராசேந்திர சோழனால் கட்டப்பட்ட சிறப்புமிக்க கோயிலாகும். மேலும், சோழர் கால கட்டட கலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
அழிந்து வரும் தமிழக கிராமியக் கலைகளை புத்தூயிர் ஊட்டும் வகையில், நிகழாண்டு கங்கைகொண்டசோழபுரத்தில் கிராமியக் கலை விழா 32 நாள்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை சார்பில் 25.12.2010 முதல் 25.01.2011 வரை, இந்த விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, கிராமியக் கலைஞர்கள் பங்கேற்கும் கரகம், காவடி, பொய்கால் குதிரை, குறவன் குறத்தி, பச்சைக்காளி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதுபோன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம், இங்கு வருகை புரியும் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 8,460 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 1.20 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அனைத்து சுய உதவிக் குழுக்களுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2800 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 900 சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதாரக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரக் கடனை பெற்ற குழு உறுப்பினர்கள், பொருளாதாரக் கடன் நிதியை கொண்டு பல்வேறு வகையான பொருள்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை பொது மக்கள் வாங்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர், கோயிலுக்கு அருகில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். யுனெஸ்கோ நிறுவனம், கோயிலிலிருந்து 300 மீட்டர் தொலைவுக்கு, பிறகே ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.
எனவே, அந்த நிறுவனத்திடம் ஆலோசித்து, விரைவில் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார் பொன்னுசாமி.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. பிச்சை, ஜயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே. ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் பரமேஸ்வரி, துணைத் தலைவர் தனசேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தி. நல்லுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் மலர்விழி, மகளிர் திட்ட அலுவலர் வசந்தி, கோட்டாட்சியர் நிர்மலா, வட்டாட்சியர் மாது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சந்திரசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் நீலாவதி பாக்யராஜ், கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சுற்றுலா அலுவலர் இரா. தண்டபாணி வரவேற்றார். உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப. கலைநேசன் நன்றி கூறினார்.