கும்பகோணம், டிச. 26: கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
முட்டக்குடி பிரதான சாலையைச் சேர்ந்தவர் சி. சின்னதுரை (50). இவர் தனது வீட்டின் முன்புறம் டீ, சிற்றுண்டி கடையும், அதனருகே எஸ்டிடி பூத்தும் வைத்துள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையிலிருந்த டேபிள், நாற்காலி, மின்விசிறி உள்ளிட்டவை தீயில் கருகின. மேலும், கடையிலிருந்து இவரது வீட்டுக்கும், அருகிலுள்ள முகம்மது தாஜுதீனின் குடிசை வீட்டுக்கும் தீ பரவியது. இதில், சின்னதுரை வீட்டிலிருந்த மரத்தினாலான பீரோ உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.
இதேபோல, முகம்மது தாஜுதீன் வீட்டிலிருந்த 2 மின்விசிறிகள், பிரிட்ஜ், வீட்டு உபயோகப் பொருள்கள், உடைகள், அந்தப் பகுதியில் இருந்த 3 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்தினர் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். திருப்பனந்தாள் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.