பெரம்பலூர், டிச. 26: பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் டயர் தொழில்சாலைக்கு நிலம் அளித்த விவசாயிகளிடம், மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி தலைமையிலான அரசு அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தில் தனியார் டயர் தொழில்சாலை அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்னர், பெரம்பலூரில் உள்ள சாதிக் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம், அந்த நிலங்களைப் பெற்றனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2007-08 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தரகர்கள் மூலம், விஜயகோபாலபுரம், நாரணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 156 விவசாயிகளிடம் இடத்துக்கு ஏற்றதுபோல, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 65 ஆயிரம் முதல் ரூ. 3.50 லட்சம் வரை அளித்துள்ளனர். மேலும், நிலம் அளிக்க மறுத்த 60 விவசயிகளின் குடும்பத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு, டயர் தொழில்சாலையில் கல்வித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
பின்னர், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 600 ஏக்கர் நிலத்தில், 435 ஏக்கர் நிலம் மட்டுமே தொழில்சாலைக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, தொழில்சாலைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது, நிலம் அளித்த விவசாயிகளுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கேட்டதற்கு முறையான பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, தங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் விவசாய சங்கப் பிரமுகர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் சா. பாலுசாமி, குன்னம் வட்டாட்சியர் தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், தனியார் டயர் தொழில்சாலைக்கு நிலம் அளித்த விவசாயிகளின் பெயர், எத்தனை ஏக்கர் நிலம், எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்தும், விவசாயிகளை மிரட்டி நிலம் கையகப்படுத்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.