மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியில் இருந்து இயக்க ரயில்வே அமைச்சகம் மறுப்பு

திருச்சி, டிச. 26: கும்பகோணம்- சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் மலைக்கோட்டை விரைவு ரயிலை மீண்டும் திருச்சியில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏற்க மறுத்துள்ளது.   திருச்சிக்கு
Published on
Updated on
2 min read

திருச்சி, டிச. 26: கும்பகோணம்- சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் மலைக்கோட்டை விரைவு ரயிலை மீண்டும் திருச்சியில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏற்க மறுத்துள்ளது.

  திருச்சிக்கு பெருமை சேர்க்கும் "மலைக்கோட்டை' பெயருடன் திருச்சி} சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில், மயிலாடுதுறை} விழுப்புரம் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது முதல் கும்பகோணம்} சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

  மொத்தமுள்ள 22 பெட்டிகளில் தற்போது, திருச்சிக்கு 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரண்டு குளிர்சாதன வசதிப் பெட்டிகளும், 2 பொதுப் பெட்டிகளும் என 11 பெட்டிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

  கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லத் தொடங்கிய நாளில் இருந்து திருச்சி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 11 பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பியே காணப்படுகிறது.

  மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழும்போதெல்லாம் விழுப்புரம்} மயிலாடுதுறை அகலப் பாதை பணிகள் முடிவடைந்து அந்தப் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியதும் மீண்டும் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் தவறாமல் வெளியிடுவது வழக்கம்.

  ஆனால், விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்ட அகலப் பாதை பணிகள் முடிந்து, அந்தப் பாதையில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

   இந்தப் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட ரயில்களில் 90 சத ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியில் இருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

   திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஒரே ரயில் பல்லவன் விரைவு ரயில் என்பதாலும், அந்த ரயில் பகல் நேர சேவை என்பதாலும் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் போதிய ரயில் சேவை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை எழுப்பிய நிலையில், உபயோகிப்பாளர் உரிமை இயக்கத்தின் பொதுச் செயலர் பாலக்கரையைச் சேர்ந்த வழக்குரைஞர் மகேஸ்வரி வையாபுரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

  இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தபோதிலும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரை பதிலளித்ததாகத் தெரியவில்லை.

   இதற்கிடையே, மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்த திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் (அதிமுக) கடந்த 04-08-10 அன்று மக்களவையில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

   இதற்கு பதிலளித்து ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது கடந்த 17-ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

   அந்தக் கடிதத்தில், "இந்த விஷயம் தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. தற்போது, சென்னை எழும்பூர்- கும்பகோணம் இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரயில் சிறந்த சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

  திருச்சியில் உள்ள தற்போதைய பயனாளிகள் இந்தச் சேவை குறித்து அதிருப்தி அடைந்திருந்தாலும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக (மெயின் லைன்) 6 விரைவு ரயில்களும், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக (கார்டு லைன்) 17 ரயில் சேவைகளும் அளிக்கப்படுகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.

   மலைக்கோட்டை விரைவு ரயிலை மீண்டும் திருச்சியில் இருந்து இயக்க மறுக்கும் வகையில், ரயில்வே இணை அமைச்சரின் கடிதம் இருப்பது திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.