நாகசுர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?

கும்பகோணம், ஆக. 22: புகழ்பெற்ற நாகசுர இசை மேதை வீருசாமிபிள்ளை நினைவாக உருவாக்கப்பட்ட முழு உருவச் சிலையைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.   கலைகளின் முன்னோடி மாவட்டமா

கும்பகோணம், ஆக. 22: புகழ்பெற்ற நாகசுர இசை மேதை வீருசாமிபிள்ளை நினைவாக உருவாக்கப்பட்ட முழு உருவச் சிலையைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  கலைகளின் முன்னோடி மாவட்டமாக தஞ்சை திகழ்கிறது. திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை,  ராஜமாணிக்கம் பிள்ளை, பந்தனைநல்லூர் மீனாட்சிசுந்தர நட்டுவனார், திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், செம்மங்குடி சீனிவாசய்யர், திருவாலங்காடு பிடில் சுந்தரேசய்யர், பாபநாசம் சிவன், சுவாமிமலையில் பிறந்த மதுரை சோமு உள்ளிட்ட பல, இசை மேதைகள் இங்கு தோன்றி உலகளவில் இசை மழையைப் பொழிந்தவர்கள்.

  அவர்கள் மறைந்தாலும், அவர்களின்  இசையை நினைவு கூர்ந்து ரசிக்கும் இசை ஆர்வலர்கள் இன்றும் உள்ளனர்.

  புகழ்பெற்ற கலை மேதைகள் வாழ்ந்த இந்தப் பகுதியில்தான் தமிழ்ப் பண்ணிசை, கர்நாடக இசை, பரதக் கலை, நாட்டுப்புற இசை போன்ற இசை மரபுகள் உருவாகி, இன்றும் நிலைத்து நிற்கின்றன.

  இசைக் கலைஞர்கள் மரத்தாலான நாகசுரத்தில் வாசிப்பதைத்தான் இன்றும் நாம் பார்க்கிறோம். ஆனால், கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் உள்ள கருங்கல்லால் ஆன நாகசுரத்தை இசைத்து, மக்களை மகிழ்வித்தவர்கள் வீருசாமி பிள்ளை, பக்கிரியா பிள்ளை ஆகியோர். இதனால், நாகசுர மேதைகள் என இவர்கள் போற்றப்படுகின்றனர்.

  நாகசுர மேதை வீருசாமிபிள்ளையின் முழு உருவச் சிலை நாகசுரம் வாசிப்பதுபோல வடிவமைக்கப்பட்டு, கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் உள்ள ஒரு கட்டடத்திற்குள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக   வெளியுலகிற்குத் தெரியாமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

  பொது இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டால், இசை ரசிகர்கள் அவரின் பெருமையையும், நினைவுகளையும் போற்ற ஏதுவாக அமையும் என இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

  தஞ்சை பெரிய கோயில் 1000-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் இந்த மாவட்ட இசைக் கலைஞர்கள், மேதைகள், அறிஞர்கள், வித்வான்கள்  போன்றோரைக் கௌரவிப்பது பெருமைக்குரியதாக இருக்கும் என்பது பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  இதுகுறித்து கலை விமர்சகர் தேனுகா கூறியது:

  மறைந்த நாகசுர மேதை வீருசாமிபிள்ளை மைசூர், திருவிதாங்கூர், புதுக்கோட்டை சமஸ்தானங்களில் வாசித்த பெருமைக்குரியவர்.

  சுவாமிமலை, பழனி போன்ற ஊர்களில் நாகசுர பயிற்சிப் பள்ளிகளில் இவர் முதல்வராகவும், திருவாவடுதுறை ஆதீன ஆஸ்தான வித்வானாகவும் இருந்தவர். திருப்பதி தேவஸ்தானம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களிலும் வாசித்தவர்.

  டி.என். ராஜரத்தினம் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவபிள்ளை, ஜி.என்.பி என்னும் ஜி.என். பாலசுப்பிரமணியன் போன்றோரின் பாராட்டையும் பெற்றவர். இன்றைய முதல்வர் மு. கருணாநிதி, இவரின் தீவிர ரசிகர்.

  தில்லி, ஹைதராபாத், சென்னை வானொலி நிலையங்களில் முதல் நிலைக் கலைஞராக வாசித்தும், இசைக் கலைஞர்களை தேர்வு செய்யும் முதன்மை அறிஞராகவும் திகழ்ந்தார் வீருசாமி பிள்ளை.

  கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், கார்குறிச்சி அருணாசலம் போன்றோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, முக்கிய இடங்களில் உள்ளன.

  எனவே, ஏற்கெனவே உருவாக்கப்பட்டு கேட்பாரற்று திருவிடைமருதூரில் சங்கக் கட்டடம் ஒன்றில் இருக்கும் நாகசுர மேதை வீருசாமி பிள்ளையின் முழு உருவச் சிலையைப் பொது இடத்தில் வைக்க வேண்டும்.

இசைக் கலைஞர்கள், பொதுமக்கள் அவரின் நினைவைப் போற்றும் வகையில் இது அமையும் என்றார் தேனுகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com