கரூர் மாவட்டத்தில் 2.97 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்

கரூர், ஜன.1: கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இலவச பொங்கள் வொருள்கள் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதில் 2.97 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பைகள் வழங்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வர
Published on
Updated on
2 min read

கரூர், ஜன.1: கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இலவச பொங்கள் வொருள்கள் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதில் 2.97 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பைகள் வழங்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி.

     தாந்தோன்றிமலை அருகேயுள்ள பொன்நகர் நியாயவிலைக் கடையில் இலவச பொங்கல் பை மற்றும் வேஷ்டி, சேலைகளை சனிக்கிழமை வழங்கி அவர் பேசியது:

    கரூர் மாவட்டத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பை வழங்க 2 லட்சத்து 96 ஆயிரத்து 657 பைகள் அந்தந்த வட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

      இதில், கரூர் வட்டத்திற்கு 1,23,024 பைகளும், குளித்தலைக்கு 53,930 பைகளும், அரவக்குறிச்சிக்கு 61,052 பைகளும், கிருஷ்ணராயபுரத்திற்கு 30,755 பைகளும், கடவூருக்கு 27,896 பைகளும் வழங்கப்பட்டுள்ளன.

      இதேபோல, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சத்து 56 ஆயிரத்து 293 சேலைகளும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 814 வேஷ்டிகளும் அந்தந்த வட்டங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளன.

      இவைகள் அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். எந்தப் பகுதிக்கு என்றைக்கு வழங்கப்படுகிறது என்ற விவரங்கள் நியாயவிலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருக்கும்.

       அதன்படி, பொதுமக்கள் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

        நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் ரமேஷ்பாபு, தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் எம். ரகுநாதன், கரூர் நகராட்சி உறுப்பினர் ஆண்டாள்பாலகுரு, திமுக நிர்வாகி ஆர். ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குளித்தலை: குளித்தலை அமுதம் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குளித்தலை நகர்மன்றத் தலைவர் அ. அமுதவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்  பொதுமக்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்கிய குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. மாணிக்கம், அய்யர்மலையிலும் இந்தப் பணியை தொடக்கிவைத்தார்.

      மேலும், வைகைநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட  மைலாடியில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையை திறந்து வைத்து அவர் பேசியது:

     அய்யர்மலை, குளித்தலை, தோகைமலை ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 53,930 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

      மைலாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்க சுமார் 2 கி.மீ தொலைவுள்ள புதூருக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது.

     இதையடுத்து, மைலாடியில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்க வேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் தற்போது இந்தக் கடை திறக்கப்பட்டுள்ளது.

     இதனால்,இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயடைவர் என்றார் அவர்.

      நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சிவராமன், குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் மு. கந்தசாமி, திமுக ஒன்றியச் செயலர் அ. சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் டி. ராஜேந்திரன், வைகைநல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எஸ். பெரியசாமி, குளித்தலை வட்டாட்சியர் எம். ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளபட்டி:     பள்ளபட்டி பேரூராட்சி 6 எண் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஏ. கலீலூர்ரஹ்மான் பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்களை வழங்கிப் பேசியது:

   ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையின்போது, புத்தாடை அணியும் வகையில் இலவச வேஷ்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    மேலும் தற்போது, பொங்கல் நாளில் சமையலுக்குத் தேவைப்படும் உணவு பொருள்களையும் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.     சிறுபான்மை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.

    எனவே, மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்றார் அவர்.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் தோட்டம் டி.எம். பசீர்அகமது தலைமை வகித்தார். பேரூராட்சித் துணைத் தலைவர் ஜே.கே. அப்துல்பாரி முன்னிலை வகித்தார்.

   6-வது வார்டு உறுப்பினர் பசீர்அகமது, மாவட்டப் பிரதிநிதி சர்புதீன், இளைஞரணி அமைப்பாளர் நத்தம் ஜாபர்அலி, வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், மண்டலத் துணை வட்டாட்சியர் த. அம்பாயிரநாதன், பரமத்தி மண்டலத் துணை வட்டாட்சியர் ந. முருகேசன், அரவக்குறிச்சி வருவாய் அலுவலர் மல்லீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.