தஞ்சாவூர், ஜன.1: தமிழக அளவில் அதிக பிரிமியம் வசூல் செய்து திருவாருர் கிளையும், கோட்ட அளவில் அதிக பாலிசிகள் சேர்த்து குளித்தலை கிளையும் சாதனை படைத்துள்ளன என்றார் எல்ஐசி முதுநிலைக் கோட்ட மேலாளர் இசக்கிராஜன்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை கூறியது:தஞ்சாவூர் கோட்டத்தில் 27 கிளைகள், 12 துணைக் கிளை அலுவலகங்கள், ஒரு சேவை மையம் உள்ளிட்ட 43 எல்ஐசி அலுவலகங்கள் உள்ளன. கோட்ட அளவில் நிகழாண்டு 5,57,000 பாலிசிகள் சேர்க்கப்பட்டு, ரூ. 630 கோடி பிரிமியம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்திலேயே முதல் கிளையாக திருவாரூர் பிரிமியம் இலக்கைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. தற்போதையை நிலைப்படி, 9 கிளைகள் 10,000 பாலிசிகளுக்கு மேல் வணிகம் செய்துள்ளன. இதில், குளித்தலை கிளை 14,336 பாலிசிகள் சேர்த்து கோட்ட அளவில் முதல் கிளையாக சாதனைப் படைத்துள்ளது.3 கிளைகள் ரூ. 20 கோடிக்கு மேலாகவும், 17 கிளைகள் ரூ. 10 கோடிக்கு மேலாகவும் மொத்த பிரிமியம் வணிகம் செய்துள்ளன. திருச்சி கண்டோன்மென்ட் கிளையை சேர்ந்த முகவர் ஆர். தனக்கோடி, 581 பாலிசிகள் சேர்த்து கோட்டத்தில் முதல் முகவராக உள்ளார்.
திருவாரூர் கிளையைச் சேர்ந்த சி. அண்ணாதுரை ரூ. 2.08 கோடிக்கு புது வணிகம் பிரிமியம் சேர்த்து, கோட்டத்தில் முதல் முகவராக உள்ளார். நாகப்பட்டினம் கிளையைச் சேர்ந்த பி. ராமசாமி ரூ. 2 கோடிக்கு மேல் புது வணிக பிரிமியம் சேர்த்து சாதனைப் படைத்துள்ளார்.
6 முகவர்கள் ரூ. 1 கோடிக்கு மேல் மொத்த முதல் பிரிமியம் தந்துள்ளனர். 127 முகவர்கள் 100 பாலிசிகளுக்கு மேல் தந்துள்ளனர் என்றார் இசக்கிராஜன்.