திருத்துறைப்பூண்டி, ஜன. 1: திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முத்துப்பேட்டையில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர். ஜெயக்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிஎன். தங்கராஜு, வட்டார செயலர் கே.வி. ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் டி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அண்மையில் பெய்த பலத்த மழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்க தனி பாசன வடிகால் வாரியம் அமைக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை சரகம் வாரியாக கணக்கிடும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கச் செயலர் பி. ரத்தினம், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.ஜி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.