திருச்சி, ஜன. 8: வலிமை மிக்க, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கூட்டணியை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார் அக்கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.
திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
"வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தி.மு.க. வுக்கு இறுதிக்கட்டப் போர். எனவே, அவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள்; பணத்தை வாரி இறைப்பார்கள். இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
அதற்கு வலிமை மிக்க, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கூட்டணி தேவைப்படுகிறது. அத்தகைய கூட்டணியை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆளுங்கட்சி 3-வது அணியை உருவாக்கி, கட்சிகளைப் பலவீனப்படுத்த முயற்சி செய்ய வாய்ப்புள்ளது.
வீட்டு மனைப் பட்டா: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிகழாண்டில், மேலும் 3 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என ஆளுநர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, அரசுத் திட்டமிட்டுள்ள 3 லட்சம் வீடுகளையும் சேர்த்து இன்னும் நான்கரை மாதங்களில் 6 லட்சம் வீடுகள் கட்டித் தரத் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் திட்டத்தின் படி, வீடு வழங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களில் 90 சதம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா இல்லை. பட்டா இல்லையென்றால், வங்கியில் கடன் பெற முடியாது. பட்டா இல்லாதவர்கள் காத்திருப்போர் பட்டியலில்தான் இருக்கவேண்டும். எனவே, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் அரசு உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டும்.
91 ஆயிரம் கோடி கடன்: தமிழக அரசு 2010 ஆம் ஆண்டு வரை வாங்கியுள்ள பொதுக்கடன் 91 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகை எதற்காக, எந்த ஆண்டு வாங்கப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும். அல்லது அது குறித்த ஒரு அறிக்கையை சட்டப்பேரவையில் அரசு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 ஜி அலைக்கற்றை விவகாரம்: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும், நடைமுறைக்கு பொருந்தாத வகையில் இழப்பீடு கணிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அரசுக்கு சங்கடத்தையும், நாட்டுக்கு அவமானத்தையும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஏற்படுத்தி விட்டார் என மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். இது பொறுப்புள்ள மத்திய அமைச்சரின் பேச்சாக இல்லை. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தவறுதலாகக் கணக்கிட்டிருந்தால், அவரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்தத் தவறை அவரையே ஏற்றுக் கொள்ள செய்திருக்க வேண்டும். ஆனால், அதே தலைமை கணக்கு அதிகாரியிடமே 3ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விதிமுறைகளை வகுத்துத் தரும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது அலைக்கற்றை விவகார வழக்குகளை மூடி மறைக்க கபில்சிபலை மத்திய அரசு முன் நிறுத்துகிறது என்பதே அம்பலமாக்கியுள்ளது. கபில் சிபல், தமிழக முதல்வரை சந்தித்து பேசிய பின்னர், அலைக்கற்றை தவறுக்கு தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்று பேசத் தொடங்கியுள்ளார். அலைக்கற்றை ஊழலை மூடி மறைக்க முயல்கின்றனர். இதனால்தான் இதுவரை ஊழலில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
2001 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் போது, 1ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அன்றையப் பிரதமர் வாஜ்பாய், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து பிரமோத் மகாஜனை உடனடியாக விலக்கினார். துறைப் பொறுப்பை தானே எடுத்துக் கொண்டார். பல்வேறு ஊழல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் சீர்குலைந்துவிட்டன. இதனால், இப்பிரச்னையை மக்களிடம் எடுத்துச் செல்கிறோம். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரத்து செய்து, மறு ஏலம் விட்டால் உண்மை தெரிந்துவிடும்' என்றார் அவர். பேட்டியின்போது, கட்சியின் மாநகரச் செயலர் க. சுரேஷ், இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் எஸ். சிவா ஆகியோர் உடனிருந்தனர்.