தஞ்சாவூர், ஜன. 8: வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள், தெருக்கள் சரியாக உள்ளதா என்பதை அலுவலர்கள் சரிபார்க்க வேண்டுமென்றார் தேர்தல் பார்வையாளர் மற்றும் சுற்றுலாத் துறை இயக்குநர் ஆ.சி. மோகன்தாஸ்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு செய்த அவர் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார்.
பின்னர், தஞ்சாவூர் வட்டம், திருக்கானூர்பட்டி, புதுப்பட்டினம் ஆகிய கிராமங்களில் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள், தெருக்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
முன்னதாக நடைபெற்றக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சக்திவேல், வருவாய்க் கோட்டாட்சியர்கள் முத்துலட்சுமி (தஞ்சாவூர்), அசோக்குமார் (கும்பகோணம்), மெய்யழகன் (பட்டுக்கோட்டை) மற்றும் வட்டாட்சியர்கள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.