பெரம்பலூர், ஜன. 22: பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரியின் வெள்ளி விழா நிறைவு விழா ஜன. 25 முதல் பிப். 1-ம் தேதி வரை நடைபெறுகிறது என்றார் அந்தக் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. வரதராஜன்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி கடந்த 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வெள்ளி விழா நிகழ்ச்சியாக ஜன. 25-ம் தேதி விளையாட்டு விழா நடைபெறுகிறது. விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரகுமார் ரத்தோட் தொடக்கிவைக்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழக உடல்கல்வி துறை இணைப் பேராசிரியர் கே.வி. பாலமுருகன் பரிசு அளிக்கிறார். 26-ம் தேதி நடைபெறும் முத்தமிழ் விழா, முன்னாள் மாணவர்களின் சங்கம விழாவில் திரைப்பட நடிகர் சிவக்குமார் பங்கேற்க உள்ளார்.
27, 28-ம் தேதிகளில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைப்போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டிகளை திரைப்பட இயக்குநர் லிங்குசாமி தொடக்கிவைக்கிறார். திரைப்பட இயக்குநர் பிரபுசாலமன், நடன இயக்குநர் வி. தினேஷ், பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் ஆகியோர் பரிசு அளிக்கின்றனர்.
29-ம் தேதி நடைபெறவுள்ள கலை விழாவை மாவட்ட ஆட்சியர் எம்.விஜயகுமார் தொடக்கிவைக்கிறார். நகராட்சி ஆணையர் போ.வி. சுரேந்திர ஷா, திரைப்பட இயக்குநர் டி.எஸ். கண்ணன் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.
30-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ராமசாமி பட்டம் அளிக்கிறார்.
31-ம் தேதி நடைபெறவுள்ள நிறைவு விழாவில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சர் து. நெப்போலியன், தமிழக வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம. ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் ஆகியோர் வெள்ளி விழா ஆண்டு மலரை வெளியிடுகின்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன் பேசுகிறார்.
பிப். 1-ம் தேதி தந்தை ரோவர் பெரம்பலூரில் தடம்பதித்த நாளையொட்டி, நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எம். ஜேம்ஸ் ரெல்டன் பங்கேற்க உள்ளார் என்றார் அவர்.
பேட்டியின் போது, கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் வி. ஜான் அசோக், கல்லூரி முதல்வர் பி.எஸ். ஜோசப், கல்லூரி இயக்குநர் இரா. சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.