மயிலாடுதுறை, ஜன. 22: தேசிய போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், தருமபுரம் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான ரா. செல்வநாயகம் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலர் ஏ. ஜி. இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
மயிலாடுதுறை பெஸ்ட் கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துசாமி கொடியசைத்து பேரணியைத் தொடக்கிவைத்தார்.
பேரணி காவிரி நகர் கிட்டப்பா மேம்பாலத்தில் தொடங்கி, சித்தர்காடு, மூவலூர், மகாதானபுரம் வழியாக மல்லியத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ரஜினிகாந்த் வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப் பணித் திட்ட உதவி அலுவலர் ச. ரவீந்திரபாரதி நன்றி கூறினார்.