புதுக்கோட்டை, ஜன. 29: புதுக்கோட்டையில் கலை பண்பாட்டுத் துறை, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
சிறுவர் மன்ற 31-ஆவது ஆண்டு விழாவையொட்டி புதுகை திலகர் திடலில் நடைபெற்ற போட்டிகளுக்கு திருச்சி மண்டலக் கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ஆர். குணசேகரன் தலைமை வகித்து, போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே 20 கிலோ முதல் 60 கிலோ வரையிலான எடைப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 90 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு ஈனா டோஜோ கலை ஆசிரியர் க. சிங்காரவேலு, சோழா மார்ஷியல் ஆர்ட் தலைவர் பி.வி. ரவிக்குமார், மாவட்ட அமெச்சூர் ஆணழகன்கழகத் தலைவர் ஆர். திருநாவுக்கரசு, மாவட்ட சிலம்பாட்டக்கழகச் செயலர் அ. சத்தியமூர்த்தி, இலுப்பூர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, சிறுவர் மன்றத்தின் திட்ட மேலாளர் பா. சாந்தி வரவேற்றார். சவகர் சிறுவர் மன்ற சிலம்ப, கராத்தே ஆசிரியர் மு. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.