திருச்சி, ஜூலை 3: ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி ஆக. 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீராம் இலக்கியக் கழகம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது.
நிகழாண்டில் சென்னை, திருச்சி, வேலூர், கோவை, சேலம், நெல்லை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் ஜூலை 17-ம் தேதி முதல் ஆக. 7-ம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
திருச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் போட்டி ஆக. 6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டி இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை எனபள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் என மொத்தம் 4 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.
இடைநிலைப் பிரிவு மாணவர்கள் (6, 7, 8-ம் வகுப்பு) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை (137) அல்லது உள்ளியது எய்தல் எளிது (540) அல்லது இன்பம் பயக்கும் வினை (669) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பிலும், உயர்நிலைப் பிரிவு மாணவர்கள் (9, 10-ம் வகுப்பு) சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் (311), அல்லது சொல்லிய வண்ணம் செயல் (664) அல்லது உழந்தும் உழவே தலை (1031) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பிலும், மேல்நிலைப் பிரிவு மாணவர்கள் (பிளஸ் 1, பிளஸ் 2) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி (398) அல்லது அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து (738), தீதுஇன்றி வந்த பொருள் (754) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் உடம்போடு உயிர்இடை நட்பு (338) அல்லது கருவியும் காலமும் செய்கையும் (631) அல்லது உண்ணற்க கள்ளை (922) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் 5 நிமிஷங்கள் பேச வேண்டும்.
ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் இருவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு கல்லூரியிலும் இளநிலைப் பிரிவில் 4 பேரும், முதுநிலைப் பிரிவில் இருவரும் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கு பெற விரும்புவோர் அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளையிலோ அல்லது ஸ்ரீராம் சிட்ஸ், 21 ஸ்ரீ காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், மதுரை சாலை, திருச்சி- 8 என்ற முகவரியிலோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 12-ம் தேதி. மேலும், விவரங்களுக்கு 0431- 4210130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.