அரியலூர், ஜூலை 3: தமிழக ஆசிரியர் கூட்டணி அரியலூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கி. தனசேகரன் தலைமை வகித்தார்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த மா. நம்பிராஜ் கூட்டணியின் மாநிலப் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு இயக்க சட்டவிதிகளின்படி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதன்படி, தமிழக ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் மாவட்டப் பொருளாளராக இருந்த வே. ராஜேந்திரன் மாவட்டச் செயலராகவும், மாவட்டத் துணைச் செயலராக இருந்த கோ. பாலசுப்பிரமணியன் மாவட்டப் பொருளாளராகவும், மாவட்டத் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்த அ. ராமநாதன் மாவட்டத் துணைச் செயலராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் மாநிலப் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்ட மா. நம்பிராஜுக்கு ஐபெட்டோ தென்னிந்தியச் செயலர் வா. அண்ணாமலை பொன்னாடை அணிவித்து வாழ்த்திப் பேசினர். இதுபோல மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டச் செயலர் சி. திருநாவுக்கரசு, மாவட்ட மகளிரணிச் செயலர் சு. செல்வி, மாவட்டத் துணைச் செயலர் க. ரவிச்சந்திரன், துணைத் தலைவர்கள் சா. தங்கசாமி, இரா. கருணாகரன், 6 வட்டாரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.