நாகப்பட்டினம், ஜூலை 3: இயற்கை வேளாண்மை மூலம் பெறப்படும் விளை பொருள்கள், மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றன என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.
நாகை மாவட்டம், திருமருகலில் சனிக்கிழமை நடைபெற்ற இயற்கை வேளாண்மை கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவை சாப்பிடுவதன் மூலம் நோயற்ற வாழ்வு உறுதியாகிறது. தழைகள் உள்ளிட்ட இயற்கை உரங்களைக் கொண்டு முன்பு விவசாயம் செய்யப்பட்டபோது, குறைந்தபட்சம் ஏக்கருக்கு 25 குவிண்டால் நெல் மகசூல் கிடைத்தது.
மண்புழு உரத்தை ஒரு முறை பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டால், அந்த உரத்தின் பலன் 2 அல்லது 3 பருவச் சாகுபடிக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னையின்றி விவசாயப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆனால், சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் 500 முதல் ஆயிரம் அடி ஆழம் வரை போர்வெல் அமைத்தால்தான் விவசாயத்துக்குத் தண்ணீர் பெற முடியும் என்ற நிலை உள்ளது. இயற்கை வேளாண்மை, மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்கக் கூடியது. மேலும், நோயற்ற வாழ்வை உறுதி செய்கிறது. எனவே, அனைவரும் இயற்கை வேளாண் முறைக்கு முனைப்புக்காட்ட வேண்டும். என்னுடைய பணிக்கால நிறைவுக்குப் பின்னர், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதே எனது எதிர்காலத் திட்டம் என்றார் ஆட்சியர்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல்லை வழங்கினார் ஆட்சியர்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் து. சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.
வேளாண் இணை இயக்குநர் இரா. முருகானந்தம், நபார்டு உதவிப் பொது மேலாளர் கே. வேணுகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உ. ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.