திருவாரூர், ஜூலை 3: திருவாரூர் மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் அதை குடும்ப அட்டையில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு காஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெற்றுள்ள பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் காஸ் சிலிண்டர் வைத்துள்ள விவரங்களை தங்களது குடும்ப அட்டையில் பதிவு செய்யாமலும், உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்காமலும் உள்ளனர்.
இவர்கள், அவரவர் குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் பெற்று வருவது தணிக்கையில் தெரியவந்துள்ளது.
இதனால், மண்ணெண்ணெய் பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய மண்ணெண்ணெய் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் களைய அனைத்து எரிவாயு இணைப்புப் பெற்றுள்ளவர்களது குடும்ப அட்டைகளில் விடுதல் இல்லாமல் முத்திரையிடும் பணி ஒவ்வொரு காஸ் முகவர் அலுவலகத்திலும் ஒரு அரசு அலுவலர் வீதம் பணியில் அமர்த்தப்பட்டு நடைபெற்று வருகிறது.
எனவே, காஸ் முகவர்களிடம் சிலிண்டர் பதிவு செய்யச் செல்லும் போது, தவறாமல் குடும்ப அட்டையை எடுத்துச் சென்று அங்கு பணியில் உள்ள அலுவலரிடம் உரிய முத்திரையை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.