கும்பகோணம், ஜூலை 3: கும்பகோணத்தில் முதல் முதலாக நின்று செல்லும் திருப்பதி விரைவு ரயிலுக்கு ரயில் உபயோகிப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
மதுரை - திருப்பதி இடையே வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்) செல்லும் விரைவு ரயில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவண்ணாமலை போன்ற ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லுமாறு ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் இருந்தது. இதையடுத்து, ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், அனைத்துத் தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ரயில்வே துறையின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து, கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருப்பதி விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவில் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ரயில் பயணிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்ற நிர்வாகம், ஜூலை மாதத்தில் அமலுக்கு வந்த புதிய கால அட்டவணையில் திருப்பதி விரைவு ரயில் கும்பகோணத்தில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், மதுரையில் இருந்து சனிக்கிழமை மாலை 7.15 க்கு புறப்பட்ட மதுரை - திருப்பதி விரைவு ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்கு சனிக்கிழமை இரவு 11.32 மணிக்கு வந்தது.
திருப்பதி விரைவு ரயில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் முதல் முதலாக வந்து நின்றவுடன் அந்த ரயிலுக்கு ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம், அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் அடியான் செட்டியார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரயில் என்ஜின் முகப்பில் வைணவ கோயிலின் சிறப்பு பூமாலை அணிவிக்கப்பட்டது. ரயிலை ஓட்டி வந்த டிரைவர் சச்சிதானந்தம், உதவி டிரைவர் நல்லதம்பி மற்றும் கார்டு ஜி.வி. ராவ் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு லட்டு போன்ற இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் ஏ. கிரி, கூட்டமைப்புச் செயலர் சத்தியநாராயணன், ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ரெங்கராஜன், மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் மகேந்திரன், ஞானம் ரவி, தமிழ்நாடு வர்த்தகர்கள் நல கழக நிர்வாகச் செயலர் சேதுமாதவன், வர்த்தகர்கள் ஜமீல், கே.எஸ். சேகர், மாணிக்கவாசகம், ரயில்வே நிலைய மேலாளர் பாஸ்கரன், பணி நிலைய அதிகாரி முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், ரயில் திருப்பதிக்கு 11.45-க்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் திருப்பதிக்கும், மறுமார்க்கத்தில் திருப்பதியிலிருந்து வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் கும்பகோணம் வந்து செல்லும்