வேதாரண்யம், ஜூலை 3: வண்டுவாஞ்சேரி கிராமத்தில் தனியார் இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் குடியிருப்புகளை நில உரிமையாளர்கள் அப்புறப்படுத்துவதை தடுத்து, நிரந்தர குடிமனையாக்கிட விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி கிராமத்தில் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம். தங்கராசு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் த. நாராயணன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே. பன்னீர்செல்வம், என். வீரப்பன், கிளைச் செயலாளர் வி. கோபால் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக மு. நாகராசு, செயலாளர் எம். ரவி, பொருளாளர் உ. மலர், துணை நிர்வாகிகள் பா. இந்திராணி, ஆர். ஜெயந்தி, தங்கவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வண்டுவாஞ்சேரி கிராமத்தில் விடுபட்டுள்ள வீடுகளுக்கு இலவச மின் விளக்கு வழங்க வேண்டும். பழமுதிர்ச்சோலை குளத்தினை நூறு நாள் வேலைத் திட்டத்தில் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.