திருச்சி, ஜூலை 3: திருச்சி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்றால், அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்வதோடு சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றம். வாகன ஓட்டுநர்களும், வாகனத்தின் உரிமையாளர்களும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாமல், அலட்சியமாகச் செயல்படுவது தண்டனைக்குரிய குற்றம். எனவே, இனி சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றால், சம்பந்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்வதோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும், வாகன உரிமையாளர், ஓட்டுநர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களும் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்த்து தங்களது உயிரையும், உடைமையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.