கரூர், ஜூலை 3: தமிழக ஆறுகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் பாயும் காவிரியின் துணை ஆற்றுப் படுகைகளின் நீர் வளத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி நன்னீர் விழிப்புணர்வு பிரசார பயணம் வேலாயுதம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
திருப்பூர் மக்கள் அமைப்பு, கரூர் சைக்கோ அறக்கட்டளை, ஈரோடு கேர்டி, திருப்பூர் சேவ் நிறுவனம், திருப்பூர் நெஸ்ட் ஆகியவை சார்பில் இந்தப் பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டது.
வேலாயுதம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம், தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு மிதிவண்டி பிரசார பயணத்திற்கு, திருப்பூர் மக்கள் அமைப்பு இயக்குநர் அ. அலோசியஸ் தலைமை வகிக்க, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி.என். சிவசுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பேரணி நொய்யல் வரை சென்றது.
இதில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர், விவசாயிகளுக்கு நீர் பாசனத்திற்கு தூய்மையான நீர், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை ஆறு, குளங்களில் கலக்க விடக்கூடாது. சாயப் பட்டறைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், கேர்டி நிறுவன இயக்குநர் பிரிதிவ்ராஜ், சித்தர் தொண்டு நிறுவனத் தலைவர் டி.என். சேதுலிங்கன், காகிதபுரம் பேரூராட்சித் தலைவர் க. முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சைக்கோ அறக்கட்டளை இயக்குநர் ஜே. கிறிஸ்துராஜ் வரவேற்றார். நெஸ்ட் தலைவர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.