பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர அழைப்பு

திருவாரூர், ஜூலை 3: திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு ஆட்சி
Published on
Updated on
1 min read

திருவாரூர், ஜூலை 3: திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ச. முனியநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரின் கட்டுப்பாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 விடுதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 5 விடுதிகளும், சீர்மரபினருக்கு ஒரு விடுதியும் என மொத்தம் 24 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

  இந்த விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விகிதாச்சார அடிப்படையில் விடுதித் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்படுவர்.

  மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கென மாநில அளவில் 3 சதமும், மத்திய அரசு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள விடுதிகளில் 5 சதம் முன்னுரிமை ஒதுக்கீடும் அளிக்கப்படுகிறது.

  பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் சேர்க்கப்படுவர். சேரும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.

  விடுதி மாணவ, மாணவிகளுக்கு நல்ல தரமான உணவும், முட்டை மற்றும் வாரம் இரு முறை அசைவ உணவும் வழங்கப்படுகிறது.

  எனவே, நிகழ் கல்வியாண்டில் விடுதியில் சேர்ந்து பயில ஆர்வமுள்ளவர்கள் உரிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் குறித்து தொடர்புடைய விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.