கும்பகோணம், ஜூலை 3: கும்பகோணத்தில் புத்தகக் கடையின் மேற்கூரையைப் பிரித்து ரூ. 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மகாமககுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த பி.ஜி. கிருஷ்ணமூர்த்தி மகன் ஸ்ரீதர் (35). இவர் ஹாஜியார் தெருவில் புத்தகக் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு கடையில் ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை வைத்து, பூட்டிவிட்டுச் சென்றாராம்.
ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறந்த போது, கடையில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் தஸ்தகீர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
"மாசுபடும் இயற்கை சூழலை மாற்ற மாணவர்கள் மரம் வளர்க்க வேண்டும்'
கும்பகோணம், ஜூலை 3: மாணவர்கள் மரம் வளர்த்தால் மாசுபடும் இயற்கை சூழலை மாற்றலாம் என்றார் கலை விமர்சகர் தேனுகா.
கும்பகோணத்தில் ஸ்டார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மரக்கன்றுகள் நடும் முகாம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற முகாமில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கான குடும்ப ஒற்றுமை, சமூக ஒற்றுமை, கணிதமேதை ராமானுஜம், காந்தியடிகள், மரக்கன்று நடுதல் போன்ற பயிற்சி நடைபெற்றது.
இந்த முகாமுக்கு ஸ்டார் மெட்ரிக். பள்ளி முதல்வர் கிளாரா மார்ட்டின் தலைமை வகித்தார். எஸ்.எம். மார்ட்டின் முன்னிலை வகித்தார். முகாமில் கலை விமர்சகர் தேனுகா பேசியது:
பூமி வெப்பமயமாதலால் இயற்கை சூழல் மாசுபடுகிறது. இதுபற்றிய கவலை எல்லா நாடுகளையும் இன்று ஆட்டிப் படைக்கிறது. பூமி வெப்பமயமாவதால் உலகின் கடல் நீர்மட்டம் உயர்ந்து, பல கடற்கரைச் சார்ந்த நாடுகள் அழிந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
இயற்கையாகவே கடல் நீர் மட்டத்துக்கு கீழ் உள்ள நாடான நெதர்லாந்து போன்ற நாடுகள், சிறு சிறு தீவுகள் போன்ற நாடுகள் அழிந்து விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், கார்களை இயக்கும் பெட்ரோலிலிருந்து கார்பன் வெளியேற்றமே இந்த சுற்றுச்சூழலின் அழிவுக்கு காரணமாய் உள்ளது. மாணவர்கள் இளம் வயதிலேயே மரக்கன்றுகளை நடுவதால், இதை மாற்றி அழகான இயற்கை சூழலோடு வாழலாம். ஒவ்வொரு மாணவரும் தன் பிறந்த நாளின் போது, மரக்கன்றுகளை நட்டு நாட்டை வளப்படுத்த வேண்டும். நமது நாட்டில் உள்ள வேப்ப மர விதைகளை கொண்டு, அரபு நாடுகளின் கடற்கரை சார்ந்த பாலவனங்களில் மரங்களை நட்டு அழகுப்படுத்தி மூலிகைகளின் பலன்களை பெறுகின்றனர். அமேசான் காடுகளில் உள்ள மூலிகை மரங்களை கொண்டுதான் அமெரிக்கா மருந்துகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது என்றார் தேனுகா.